கோவையில் அதிர்ச்சி.. காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி மீண்டும் மிரட்டல்!

 
கோவை காதலிக்க மறுத்த

கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி, 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த ரவுடி, மீண்டும் அம்மாணவியைப் பின்தொடர்ந்து மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தாளியூர் பேரூராட்சி ஊழியர் சுந்தரமூர்த்தி என்பவரது மகள், கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் அம்மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து, மாணவி அந்தப் பழக்கத்தை முற்றிலும் துண்டித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த மே 25-ம் தேதி தனது கூட்டாளிகளுடன் வந்து மாணவியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடினார். கடந்த 2 மாதங்களாகப் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த கார்த்திக், நேற்று மீண்டும் கொடூர புத்தியைக் காட்டியுள்ளார்:

கல்லூரி முடிந்து பேருந்தில் வந்து வீட்டிற்கு நடந்து சென்ற மாணவியை, கார்த்திக் தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து பின்தொடர்ந்து மிரட்டியுள்ளார். பயந்து போன மாணவி அலறியபடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தப்பினார். மாணவியின் பெற்றோர் வருவதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

31 வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு ஆபத்தான நபரை 2 மாதங்களாகப் பிடிக்கத் தவறியது ஏன் என்று தொண்டாமுத்தூர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் துறை மீது கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளி மீண்டும் அதே இடத்திற்கு வந்து மிரட்டும் அளவிற்குப் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பொதுமக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.