டெல்லியில் அதிர்ச்சி.. 3 பெண் பத்திரிகையாளர்களிடம் அத்துமீறய போலீசார்!
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றின்போது, செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண் பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அத்துமீறியுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, அவர் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் நேஹா போரா, யோகேந்திரா யாதவ், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். கைது நடவடிக்கைகளைப் பதிவு செய்துகொண்டு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பெண் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

அசோகா சாலை பகுதியில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த பெண் பத்திரிகையாளரின் பின்னால் நின்ற காவல் அதிகாரி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். போராட்டக்காரர்களைக் கைது செய்யும் போது பெண் போலீசார் யாரும் இல்லாததைக் சுட்டிக்காட்டிய பெண் பத்திரிகையாளரை, ஆண் போலீஸ் அதிகாரி ஒருவர் மார்பில் பிடித்துத் தள்ளிவிட்டுள்ளார். மேலும், உதவி காவல் ஆணையாளர் அந்தத்திலுள்ள அதிகாரியும் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகப் பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் பார்லிமெண்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு வெளியே பல மணி நேரம் அமர்ந்து புகார் அளித்தும், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது இப்புகார் தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண் பத்திரிகையாளர்களிடம் டெல்லி போலீசார் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த புகார் மீது டெல்லி காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 'இந்திய பிரஸ் கிளப்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
