கும்பகோணத்தில் அதிர்ச்சி... அத்திவரதரைத் தரிசிக்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

 
அத்தி வரதர் அத்தி வரதர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு காட்சியளிக்கும் கும்பகோணம் அத்திவரதரைத் தரிசிக்க சென்றிருந்த வேலூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர், வரிசையில் காத்திருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில், பாதாள அறையில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர், கடந்த மார்ச் 1ம் தேதி வெளியே கொண்டு வரப்பட்டார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த வைபவத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கும்பகோணத்தில் குவிந்து வருகின்றனர்.

அத்தி வரதர்

இந்நிலையில் வேலூர் மாவட்டம் தத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (55) என்பவர், தனது நண்பர்களான ரமேஷ் மற்றும் ரமேஷ் பாபு ஆகியோருடன் இன்று அதிகாலை அத்திவரதரைத் தரிசிக்கக் கும்பகோணம் சென்றுள்ளார். இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திடீரெனப் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழையில் நனைந்தவாறே வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

கோவிலுக்கு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, சசிகுமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அத்திவரதர்

அத்திவரதர் இன்று இரவு தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் பாதாள அறைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார். கடைசி நாள் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், இந்த உயிரிழப்பு பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.