தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... மதுரையில் காவல் நிலையம் அருகே அரிவாளால் வெட்டிப் படுகொலை!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு மிக அருகில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் ஒரு மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சப்பாணி சரவணன் (50) என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சப்பாணி சரவணன் தினமும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட டீக்கடைக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனைக் குறிவைத்து நோட்டமிட்ட மர்மக் கும்பல் ஒன்று, அவர் அங்கு வந்திருந்த சமயத்தில் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.
காவல் நிலையம் அருகே நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
