காலையிலேயே அதிர்ச்சி... வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு... ரூ.3,237-க்கு விற்பனை!

 
வணிக சிலிண்டர் வணிக சிலிண்டர்

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், மே மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் அதிரடியான உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வால், சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ.3,237 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே நீடிக்கிறது.

ஹோட்டல் சிலிண்டர்

மாநில வரி விதிப்புகளுக்கு ஏற்ப சிலிண்டரின் விலை நகரத்திற்கு நகரம் மாறுபடுகிறது. இன்றைய நிலவரப்படி தலைநகர் டெல்லி: ரூ.3,071.50, கொல்கத்தா: ரூ.3,202, சென்னை: ரூ.3,237 என விற்பனை செய்யப்படுகிறது.

வணிக சிலிண்டரின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.900-க்கு மேல் உயர்த்தப்பட்டிருப்பது உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை மற்றும் பேக்கரி பண்டங்களின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது சாமானிய மக்களின் பாக்கெட்டுகளை நேரடியாகப் பாதிக்கும் என்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர்

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வர்த்தக ரீதியாகப் பெரும் சுமையைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.