காலையிலேயே அதிர்ச்சி... மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 4 முறை தொடர் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு!

 
நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பிராந்தியத்திற்கு உட்பட்ட ஹிங்கோலி, நான்டெட் மற்றும் பர்பானி ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவுக்குப் பின் ஏற்பட்ட இந்தத் திடீர் நில அதிர்வுகளால் பொதுமக்கள் பயந்துபோய் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

தேசிய நில அதிர்வு மையத்தின்தகவலின்படி, இன்று அதிகாலை 1:37 மணி அளவில் மிக வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஹிங்கோலி மாவட்டத்தின் வஸ்மத் தாலுகாவில் உள்ள பங்ரா ஷிண்டே கிராமத்திற்கு அருகே, பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லடாக் நிலநடுக்கம்

முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேர இடைவெளியில் மேலும் மூன்று முறை லேசான நில அதிர்வுகள்ஏற்பட்டுள்ளன. அதிகாலை 2:15 மணிக்கு ரிக்டர் அளவில் 3.6 ஆகவும், அதிகாலை 2:17 மணிக்கு ரிக்டர் அளவில் 3.9 ஆகவும் நில அதிர்வுகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து அதிகாலை 3:23 மணி அளவிலும் மற்றுமொரு லேசான அதிர்வு உணரப்பட்டது.

இதனால் ஹிங்கோலி நகரம், வஸ்மத், கலம்னூரி, அவுந்தா நாகநாத் மற்றும் அண்டை மாவட்டங்களான பர்பானி, நான்டெட் ஆகிய பகுதிகளில் விடிய விடிய மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பல கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கோவில்களில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான திறந்தவெளி மைதானங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்கனவே அங்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தத் திடீர் நிலநடுக்கம் மக்களிடையே மேலும் பீதியை அதிகரித்துள்ளது. பருவமழைக் காலத்தில் பூமிக்கு அடியில் ஏற்படும் சில புவியியல் நகர்வுகள் காரணமாகவே இந்த அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாகச் சில வீடுகளின் சுவர்களில் லேசான விரிசல்கள் விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவிலான சொத்துச் சேதங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ எங்கும் ஏற்படவில்லை என ஹிங்கோலி மற்றும் பர்பானி மாவட்ட நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், நிலநடுக்கம் போன்ற அவசரக் காலப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அமைதி காக்குமாறும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.