பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து; 7 பேர் பலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் அனுமதியின்றிச் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு குடோன் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், அங்குப் பணியிலிருந்த 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் டலி என்ற பகுதியில் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி, மக்கள் குடியிருப்புக்கு அருகே சட்டவிரோதமான முறையில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் நேற்று இரவு நேர வழக்கமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் பட்டாசுகள் மற்றும் வெடிமருந்துகள் மீது தீப்பொறி பட்டுள்ளது. அடுத்த சில நொடிகளில் ஒட்டுமொத்த குடோனும் வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்தின் வீரியத்தால் குடோனின் கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

இந்த பயங்கர விபத்தின் போது குடோனின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள், தப்பியோடக் கூட வழியில்லாமல் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் கருகியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். வெடிச்சத்தம் கேட்டு அலறியடித்தபடி ஓடிவந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக்குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், இடிபாடுகளை அகற்றி உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஜெய்ப்பூர் மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில் யாருடைய பின்னணியில் இந்த சட்டவிரோத குடோன் செயல்பட்டு வந்தது? பாதுகாப்பு விதிமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை? என்பது குறித்துப் போலீசார் குடோன் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.
