காலையிலேயே அதிர்ச்சி... டெல்லி - காசியாபாத் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிப்பு!

 
ரயில் தடம் புரண்டு

டெல்லி - காசியாபாத் முக்கிய ரயில் பாதையில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் இருந்து காசியாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. விபத்து குறித்துத் தகவலறிந்த உடனடியாக மீட்புக் குழுவினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம் புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சரக்கு ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, அந்த வழியில் செல்ல வேண்டிய பல பயணிகள் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் உபாத்யாய் கூறுகையில், கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த விபத்தின் காரணமாக மொத்தம் 53 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில ரயில்கள் பகுதியளவாக ரத்து செய்யப்பட்டும் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.