காலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை உயர்வு... புதிய விலை அமலுக்கு வந்தது!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று சமையல் எரிவாயு விலையை உயர்த்தி அறிவித்துள்ளன.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 29.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய விலை: ₹1,899.50 இன்றைய விலை (மார்ச் 1): ₹1,929.00. தொடர்ந்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் இந்த சிலிண்டர் விலை உயர்ந்து வருவது, உணவுப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே வணிகச் சிலிண்டர் விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

அதே சமயம் வீட்டு உபயோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலையில் இந்த மாதமும் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்றைய விலை: ₹868.50
கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ஒரே நிலையில் நீடித்து வருவது பொதுமக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ள போதிலும், ஏற்கனவே உள்ள அதிக விலையைக் குறைக்க வேண்டும் என்பதே நுகர்வோரின் கோரிக்கையாக உள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் இறக்குமதி செலவை அதிகரித்துள்ளன.
