காலையிலேயே அதிர்ச்சி... முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் காலமானார்!

 
முலாயம் சிங் யாதவ் முலாயம் சிங் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மறைந்த முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38), லக்னோவில் உள்ள சிவில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தாவின் மகன் ஆவார். பாஜக தலைவர் அபர்ணா யாதவின் கணவரான பிரதீக் யாதவின் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினர் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீக் யாதவ் தீவிர அரசியலில் ஈடுபடாமல், ரியல் எஸ்டேட் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த தொழில்களில் ஆர்வம் காட்டி வந்தார். இன்று காலை அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கான துல்லியமான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் உரிய அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீக் யாதவின் மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இளம் வயதிலேயே அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கும், அவரை அறிந்தவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது.