காலையிலேயே அதிர்ச்சி... அரசுப் பேருந்து மோதி சன் டிவி நிறுவன வீடியோ எடிட்டர் உயிரிழப்பு!
சென்னை மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில், சன் செய்திகள் தொலைக்காட்சியின் மூத்த வீடியோ எடிட்டர் முத்து ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் ஊடகத் துறையினர் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறை மற்றும் ஊடக வட்டாரங்கள் தரப்பிலிருந்து தெரியவந்துள்ள விபரங்களின்படி, சன் செய்தி நிறுவனத்தில் வீடியோ எடிட்டராக பணியாற்றி வந்த முத்து ஜெகநாதன், இன்று (ஜூன் 19) அதிகாலை வழக்கம் போல் தனது பைக்கில் பணி நிமித்தமாக அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக அவரது பைக் மீது பலமாக மோதியது.

பேருந்தின் சக்கரத்தில் சிக்கித் தூக்கி வீசப்பட்ட முத்து ஜெகநாதன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், உயிரிழந்த முத்து ஜெகநாதனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபற்குக் காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்துதல், அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மறைவுக்குப் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும், சக ஊடக நண்பர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
