அதிகாலையில் அதிர்ச்சி... லாரி - பேருந்து மோதி கோர விபத்து; 10 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் துயரம்!
ஆந்திர மாநிலத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் மாவட்டம் ராயவரம் அருகே இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில், தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து ஆந்திராவின் பாமூர் (Pamur) நோக்கி ஒரு தனியார் சுற்றுலாப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அதிகாலை வேளையில் ராயவரம் அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று பேருந்து மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து சிதறியதால், அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
