அமெரிக்காவில் அதிர்ச்சி.. 6 மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை கைது!

 
பாலியல்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், 6 மாணவர்களுக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்ததாகப் பெண் ஆசிரியை ஒருவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆசிரியை மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜார்ஜியா மாகாணம் டக்ளஸ்வில் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் மாரிஸ் நிக்கோல்ஸ் (33). இவர் தனது பள்ளியில் படித்து வந்த 6 மாணவர்களைத் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஆசிரியை மாரிஸ் நிக்கோல்ஸ் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, அதனை அந்த மாணவர்களுக்கே அனுப்பி வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியவரவே, அவர்கள் உடனடியாகக் காவல் துறையில் புகார் அளித்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் கடந்த மே மாதம் 8-ஆம் தேதியன்று போலீசார் முதன்முதலாக இவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஜாமீனில் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் தொடர்ந்து நடத்திய தீவிர புலனாய்வில், மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததைத் தொடர்ந்தும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்தும் தற்பொழுது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் மீதான பாலியல் தாக்குதல், பாலியல் வன்கொடுமை மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட மொத்தம் 13 கடுமையான குற்றச்சாட்டுகள் ஆசிரியை மாரிஸ் நிக்கோல்ஸ் மீது சுமத்தப்பட்டு, அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.