நெல்லையில் அதிர்ச்சி... மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கணவன்!
திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து தந்தை வீட்டிற்குச் சென்ற ஆத்திரத்தில், மாமனார் வீட்டின் மீது கணவரே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் (40). தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி செல்விக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், மனமுடைந்த செல்வி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

மனைவி தன்னைப் பிரிந்து தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டதால் கடும் ஆத்திரமடைந்த ஆறுமுகம், சம்பவத்தன்று இரவு மதுபோதையில் மாமனார் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோல் குண்டை மாமனார் வீட்டின் மீது வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். பெட்ரோல் குண்டு வெடித்துச் சிதறியதில் வீட்டின் முன் பக்க ஜன்னல் மற்றும் கதவு நிலைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் தீயை அணைத்ததால், அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்துச் செல்வியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தைப் பிடிக்கப் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
