திருப்பத்தூரில் அதிர்ச்சி... 9 நாள் பெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை; பெற்றோர் உட்பட 4 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ரூபாய் 1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் குழந்தைகள் நலத்துறைக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

கடந்த 10 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியிடம் இந்த விற்பனை இடைத்தரகர்கள் மூலமாக நடைபெற்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் நலத்துறையின் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குழந்தையின் பெற்றோர் மற்றும் இந்தச் செயலில் இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்கள் என மொத்தம் 4 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், விற்கப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
