திருப்பத்தூரில் அதிர்ச்சி... குடும்பத் தகராறில் கணவரைக் வெட்டிக்கொன்ற மனைவி!

 
கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரைக் கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைய நகரம் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி குமார் (43). இவரது மனைவி ரம்யா (35). இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். குமாருக்கு தீவிர மதுப்பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் வழக்கம் போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்த குமார், ரம்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து குமாரின் கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் உயிரிழந்ததை உறுதி செய்த ரம்யா, உடனடியாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையிலான காவல்துறையினர், குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் எஸ்பி அக்சய் அனில் வாகரே சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரம்யாவைக் கைது செய்தனர்.