திருவள்ளூரில் அதிர்ச்சி... ரேஷன் பொருட்களை இரவில் வடமாநில நபர்களுக்கு வினியோகம் செய்த விற்பனையாளர் பணியிடை நீக்கம்!
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், விடுமுறை நாளில் நள்ளிரவில் வடமாநில நபர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்த விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) இரவு 8 மணியளவில் விற்பனையாளர் அருள் திறந்துள்ளார். அப்பகுதியில் தங்கியிருக்கும் வடமாநில நபர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அவர் சட்டவிரோதமாக வினியோகம் செய்ததுடன், தொடர்ந்து பொருட்களைப் பதுக்கி விற்று வருவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்தி மற்றும் புகார்களின் அடிப்படையில் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாகத் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, உளுந்தை ரேஷன் கடை விற்பனையாளர் அருலைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
