திருச்சியில் அதிர்ச்சி... அரசுப் பள்ளி மாணவியிடம் 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை - கணித ஆசிரியர் கொடூரம்!

 
பாலியல் பலாத்காரம் இளம்பெண்

திருச்சி அருகே அரசுப் பள்ளியில் பயின்ற 14 வயது மாணவியிடம் தொடர்ச்சியாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த கணித ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.

திருச்சி மாவட்டம் அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜெ. குமரவேல் (44). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி பாலியல் பலாத்காரம்

திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அந்த மாணவியிடம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல்களிலும் அத்துமீறல்களிலும் அவர் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போக்ஸோ சிறப்பு நீதிமன்றக் காவல்துறையினர், ஆசிரியர் குமரவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இந்த வழக்கு தொடர்பான தீவிர விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்துத் தரப்பு சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது. இதனையடுத்தே, குற்றவாளியான கணித ஆசிரியர் ஜெ. குமரவேலுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர் பணிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட நபருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிரடித் தண்டனைப் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.