அதிர்ச்சி... மரத்தில் பைக் மோதி 12ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே மாணவர்கள் 3 பேர் பைக்கில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் மரத்தின் மீது பைக் மோதி பரிதாபமாக 3 மாணவர்களும் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியன். இவரது மகன் முத்துலிங்கம் (16). அதே போன்று சின்ன ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராமன் (17). இசுக்கழிகாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (17). நண்பர்களாக 3 பேரும் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் முத்துலிங்கம் உள்ளிட்ட 3 பேரும் ஒரே பைக்கில் வேட்டவலத்தில் இருந்து தளவாய்குளம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களது பைக் ஆவூர் முருகர் கோயில் அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் உள்ள அரச மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமனும், ஜெகதீஷூம் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அந்த வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் முத்துலிங்கம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமனும், ஜெகதீஷூம் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களான மூன்று 12ம் வகுப்பு மாணவர்கள் விபத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!