இந்தியர்களுக்கு அதிர்ச்சி... அமெரிக்காவில் எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கும் புதிய மசோதா!

 
அமெரிக்கா விசா க்ரீன் கார்டு அமெரிக்கா விசா க்ரீன் கார்டு

அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த உதவும் எச்-1பி (H-1B) விசா நடைமுறையில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வரவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் புதிய விசாக்கள் வழங்குவதை நிறுத்தவும் கோரி 'எச்-1பி விசா துஷ்பிரயோக தடுப்புச் சட்டம் 2026' (End H-1B Visa Abuse Act of 2026) என்ற மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எச்-1பி விசா வழங்கும் நடைமுறையை முழுமையாக முடக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எச்-1பி விசா பெறுபவர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 2,00,000 டாலராக (சுமார் 1.67 கோடி ரூபாய்) இருக்க வேண்டும். இது தற்போதைய சராசரி சம்பளத்தை விட மிக அதிகம்.

நியூசிலாந்து விசா

ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 65,000-லிருந்து 25,000-ஆகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விசாவில் இருப்பவர்கள் கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமைக்கு மாறுவதைத் தடை செய்யவும், மாணவர்களுக்கான பயிற்சித் திட்டமான OPT (Optional Practical Training) முறையை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதைத் தடுக்கும் விதிகளும் இதில் உள்ளன.

அமெரிக்கக் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் (டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்) இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நியமிப்பதன் மூலம், தகுதியான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எச்1-பி' விசா அறிவிப்பு அமெரிக்கா

இந்த மசோதா சட்டமானால், அமெரிக்காவில் பணிபுரியும் மற்றும் அங்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (TCS, Infosys, Wipro போன்றவை) கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக, இந்திய மாணவர்கள் அமெரிக்கப் படிப்பிற்குப் பிறகு அங்கேயே பணிபுரியும் வாய்ப்பு (OPT) பறிபோகும் சூழல் உருவாகும்.

இருப்பினும், இது தற்போது மசோதா நிலையில் மட்டுமே உள்ளது. அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இதற்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் என்பதால், இது சட்டமாவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.