இன்ஸ்டா பயனர்களுக்கு அதிர்ச்சி... உங்க அனுமதியின்றி புகைப்படங்களை நகலெடுக்கும் மெட்டாவின் புதிய 'மியூஸ் இமேஜ்' AI; தப்பிப்பது எப்படி?

 
ஏஐ இன்ஸ்டா மெட்டா ஆபாசம்

பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா, தனது பயனர் தனியுரிமை விதிகளில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவு  அம்சமான 'மியூஸ் இமேஜ்' தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய தொழில்நுட்பம், இன்ஸ்டாகிராம் பயனர்களின் அனுமதியோ அல்லது முன்னறிவிப்போ இன்றி அவர்களின் முக அமைப்பையும் தோற்றத்தையும் அப்படியே நகலெடுத்துப் புதிய ஏஐ படங்களை உருவாக்கும் திறன் கொண்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்ஸ்' என்ற உயர் தொழில்நுட்பக் குழுவால் இந்த மியூஸ் இமேஜ் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது. இது மெட்டாவின் முதலாவது உள்நாட்டுப் பட உருவாக்க மாதிரியாகும்.

எங்குப் பயன்பாட்டில் உள்ளது?

இந்த ஏஐ கருவி ஏற்கனவே மெட்டா ஏஐ செயலி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இது ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளிலும் சேர்க்கப்பட உள்ளது.

க்க்

வெறும் எளிய உரை கட்டளைகளை உள்ளீடு செய்வதன் மூலம், பல புகைப்படங்களை ஒன்றாக இணைக்கவும், படத்தின் ஒரு பகுதியை மட்டும் திருத்தவும், படிக்கக்கூடிய உரைகளைச் சேர்க்கவும், மற்றும் ஸ்கேன் செய்யக்கூடிய செயல்பாட்டு க்யூ ஆர் குறியீடுகளை உருவாக்கவும் இந்தக் கருவியால் முடியும்.

இந்த மியூஸ் இமேஜ் ஏஐ தொழில்நுட்பத்தில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ள அம்சம் என்னவென்றால், இதன் மூலம் யார் வேண்டுமானாலும் மற்றவர்களின் முகத்தைப் பயன்படுத்திப் படங்களை உருவாக்க முடியும் என்பதாகும்.

மெட்டா ஏஐ-இன் கட்டளை வரியில் யாராவது ஒரு பொது இன்ஸ்டாகிராம் கணக்கைக் குறியிட்டால், அந்த ஏஐ அமைப்பு சம்பந்தப்பட்ட நபரின் சுயவிவரப் பக்கத்திலிருந்து புகைப்படங்களை எடுத்து, அவரது முகம் மற்றும் தோற்றத்தை அப்படியே நகலெடுத்து ஒரு புதிய படத்தை உருவாக்கிவிடும். இதற்கு மெட்டா நிறுவனம் அந்த நபரிடம் எந்த அனுமதியும் கேட்பதில்லை; அவர்களுக்கு எவ்வித அறிவிப்பையும் அனுப்புவதில்லை.

பொதுக் கணக்கு வைத்துள்ள அனைத்துப் பயனர்களுக்கும் இந்த அம்சம் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டுள்ளது. யாராவது உங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏஐ படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தால் கூட, அதை நீங்கள் தற்செயலாகப் பார்க்கும் வரை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என மெட்டாவின் உதவிப் பக்கமே ஒப்புக்கொண்டுள்ளது.

இப்பிரச்சனை குறித்து மெட்டா நிறுவனம் கூறுகையில், மியூஸ் இமேஜ் உருவாக்கும் ஒவ்வொரு படத்திலும் 'கான்டென்ட் சீல்'  எனப்படும் கண்ணுக்குப் புலப்படாத டிஜிட்டல் நீர்முத்திரையைச் சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இது படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்குமே தவிர, ஒருவரின் முகம் அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அவதூறாக மாற்றப்படுவதையோ தடுக்காது எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வ்ஹ்வ்ஹ்

இன்ஸ்டாகிராமில் இந்த வசதியை உடனடியாக முடக்குவது எப்படி?

உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை மெட்டா நிறுவனம் ஏஐ உருவாக்கத்திற்குப் பயன்படுத்துவதைத் தடுக்க, கீழே உள்ள எளிய வழிமுறைகளை உடனடியாகச் செய்யுங்கள். உங்கள் மொபைலில் இன்ஸ்டாகிராம் செயலியைத் திறந்து, சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும். மேல் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளை தட்டவும்.

கீழே ஸ்கார்ல் சென்று, "பகிர்வு மற்றும் மறுபயன்பாடு" என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு "உங்கள் உள்ளடக்கத்தை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தவும், மெட்டாவில் உள்ள ஏஐ அம்சங்களைப் பயன்படுத்தவும் மற்றவர்களை அனுமதியுங்கள்" என்ற தலைப்பைக் கண்டறியவும். அதன் கீழ் உள்ள "பதிவுகள்" மற்றும் "ரீல்ஸ்" ஆகிய இரண்டு நிலாமாற்றிகளையும் முற்றிலுமாக அணைத்துவிடவும்.

இந்த அமைப்பை நீங்கள் அணைத்தாலும், இதற்கு முன்பு உங்கள் பொதுப் புகைப்படங்களைப் பயன்படுத்தி யாராவது ஏற்கனவே ஏஐ படங்களை உருவாக்கியிருந்தால், அவை நீக்கப்படாது. இந்த அம்சம் முன்தேதியிட்டுச் செயல்படாது. மேலும், உங்கள் கணக்கைத் தற்பொழுது 'பிரைவேட்' ஆக மாற்றினாலும், பழைய பொதுப் புகைப்படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஏஐ படங்கள் அப்படியேதான் இருக்கும்.

மெட்டா நிறுவனம் இந்த புதிய தனியுரிமை அமைப்புகளைப் படிப்படியாகவே அனைத்துக் கணக்குகளுக்கும் புதுப்பித்து வருவதால், சில பயனர்களுக்கு இந்த ஆப்ஷன் உடனடியாகத் தெரியாமல் போகலாம். அவ்வாறு இல்லாதவர்கள் சில நாட்கள் கழித்து மீண்டும் சரிபார்த்து இதனை முடக்கிக் கொள்ளலாம். இணையப் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்களைத் தவிர்க்கப் பயனர்கள் தங்களது சுயவிவரப் படங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு சைபர் க்ரைம் போலீசார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.