இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி... கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை... கிலோ ரூ.60க்கு விற்பனை!

 
தக்காளி தக்காளி

சமையலில் அத்தியாவசிய பொருளாக விளங்கும் தக்காளியின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

சத்தியமங்கலம் மட்டுமல்லாது திண்டுக்கல், கோவை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்ட சந்தைகளிலும் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. தலைநகர் சென்னை, சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைகளிலும் விலையில் 20 ரூபாய் வரை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை குறைத்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

திடீர் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் வீடுகளில் தக்காளி பயன்பாடு குறைக்கப்பட்டு மாற்று முறைகளை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். வரத்து சீராக இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்பதால் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் தக்காளி விற்ற காலம் மாறி இப்போது விலை உயர்ந்து வருவது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கிறது. அரசு தலையிட்டு விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.