அதிர்ச்சி... வீட்டில் தனியே இருந்த பெண் கொடூர கொலை!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழநவ்வலடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி லட்சுமி (62). ராஜகோபால் இறந்துவிட்டதால் லட்சுமி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் வீட்டில் சமோசா தயார் செய்து அதை ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள கடை, வீடுகளுக்கு விற்பனை செய்து வந்தார். லட்சுமி குடியிருக்கும் வீட்டின் அருகிலேயே அவருக்கு சொந்தமான மற்றொரு வீடும் உள்ளது.
அந்த வீட்டில் நெல்லை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது மனைவி, 2 மகன்களுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வாடகைக்கு குடியேறினார். கடந்த 27-ந் தேதி காலையில் லட்சுமி ஏரலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு பகலில் தனது வீட்டிற்கு திரும்பினார். அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
நேற்று காலையிலும் லட்சுமி வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெயரை சொல்லி அழைத்தனர். ஆனால் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் அருகே சென்றனர். அப்போது, ஒரு விதமான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து உடனடியாக ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார், ஆய்வாளர்கள் ஆத்தூர் மாரியப்பன், குலசை கண்ணன், உதவி ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ், ராமகிருஷ்ணன், போலீசார் வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு லட்சுமி முகத்தில் போர்வை சுற்றப்பட்ட நிலையில், கொலையுண்டு கிடந்தது தெரியவந்தது. அவர் இறந்து 2 நாள்களுக்கு மேலாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டார். இந்த சம்பவங்களுக்கு இடையே வாடகை வீட்டில் வசித்து வந்த பாலமுருகன் தனது குடும்பத்துடன் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் பாலமுருகன் தற்போது வாடகைக்கு இருக்கும் வீட்டில் ஏற்கனவே கடந்த 4 மாதங்களுக்கு முன் குடியிருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் கடந்த 1 மாதத்திற்கு முன் வாடகைக்கு வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இதன் காரணமாக லட்சுமியின் முகத்தை போர்வையால் மூடி மூச்சைத் திணறடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலி அப்படியே கிடந்தது. அவரது கழுத்திலும் காயம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பாலமுருகன் குடும்பத்தினரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆறுமுகநேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!