உருவக்கேலியால் விபரீதம்... கோடரியால் சக தொழிலாளியை வெட்டிக்கொன்ற சுமை தூக்கும் தொழிலாளி சரண்!

 
கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காய்கறி மார்க்கெட்டில், பரஸ்பரம் உருவக்கேலி செய்துகொண்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், தூங்கிக்கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளியைக் கோடரியால் வெட்டிக்கொலை செய்த சக தொழிலாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த காளிராஜ் (40) மற்றும் அஞ்சுராமன்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை (40) ஆகிய இருவரும் கோவில்பட்டி திட்டங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பணிபுரியும் இடத்தில் இருவரும் மாறி மாறி உருவக்கேலி செய்து வந்ததால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி இரவும் உருவக்கேலி தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காளிராஜ், சின்னத்துரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல் பணி முடிந்து, அதிகாலையில் வரும் காய்கறி லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்குவதற்காகக் காளிராஜ் மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் படுத்துத் தூங்கினார்.

நள்ளிரவில் மதுபோதையில் கோடரியுடன் மார்க்கெட்டுக்கு வந்த சின்னத்துரை, தூங்கிக் கொண்டிருந்த காளிராஜின் கழுத்தில் கொடூரமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் காளிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையைச் செய்த பின்னர், சின்னத்துரை கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்தார்.

கொலை படுகொலை வெட்டிக்கொலை

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் கோவில்பட்டி கிழக்குக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சின்னத்துரையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த காளிராஜிற்கு மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து 2 மாதங்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர் என்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.