போர் பதற்றத்தால் அதிர்ச்சி... LPG சிலிண்டர் விலை மீண்டும் உயரும் அபாயம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே திடீரென வெடித்துள்ள நேரடி ராணுவ மோதல் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் வீட்டு உபயோக மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விலை வரும் நாட்களில் மீண்டும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி கேஸ் சிலிண்டர்கள் பின்வரும் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 கிலோ) ₹957.50 ஆக விற்பனையாகிறது. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் (19 கிலோ) ₹3,106 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில்தான் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் ₹172 முதல் ₹183.50 வரை குறைக்கப்பட்டு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்தது. ஆனால், அதற்குள் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் இந்த விலை வீழ்ச்சியைத் தலைகீழாக மாற்றும் நிலையை உருவாக்கியுள்ளது.

உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தின் மிக முக்கிய நுழைவாயிலாக விளங்குவது ஹோர்முஸ் நீரிணை ஆகும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் இந்த கடல் வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, எல்.பி.ஜி சிலிண்டர்களின் இறக்குமதிச் செலவும் பலமடங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை கணிசமாக உயர்த்தக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
