அதிர்ச்சி... மாம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் பலி; தாய் உட்பட மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!

 
மாம்பழம் மாம்பழம்

கர்நாடக மாநிலம் பீதர் பகுதியைச் சேர்ந்தவர் வைஜிநாத், இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதியினர் தங்களது 4 மகள்களுடன் ஹைதராபாத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களது உறவினரான ரேணுகா என்பவர், சமீபத்தில் நாராயணகுடாவில் உள்ள ஜல்மண்டலி அலுவலகம் அருகே ஆசையாக மாம்பழங்கள் வாங்கி வந்து இவர்களது குடும்பத்தினருக்குக் கொடுத்துள்ளார். இந்த மாம்பழங்களை இந்துமதியும், அவரது நான்கு மகள்களும் ஆவலோடு பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

மாம்பழம்

மாம்பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே இந்துமதி மற்றும் அவரது மகள்கள் நான்கு பேருக்கும் திடீரென கடுமையான வயிற்று வலி, தலைச்சுற்றல் மற்றும் விபரீதமான வாந்திப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைகுலைந்து போன ஐந்து பேரையும், உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு உடனடியாக கச்சிகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி வைஜிநாத்தின் மூன்றாவது மகளான புவனேஸ்வரி (17) திங்கள்கிழமையன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள், அடுத்த நாளே அவரது இளைய மகளான சந்தியாவும் (10) சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டுப் பரிதாபமாகத் தன் உயிரை விட்டார். மாம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

மாம்பழம்

தற்போது தாய் இந்துமதி மற்றும் மற்ற இரண்டு மகள்களின் உடல்நிலை ஓரளவு சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சோக சம்பவம் தொடர்பாகக் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாராயணகுடா போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாப்பிட்ட மாம்பழத்தின் மாதிரிகள் மற்றும் மீதமிருந்த பழங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு, ரசாயன ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நச்சுத்தன்மை வாய்ந்த கார்பைடு கற்கள் மூலம் மாம்பழம் பழுக்க வைக்கப்பட்டதா அல்லது அதில் ஏதேனும் விஷம் கலந்திருந்ததா என்ற பரிசோதனை முடிவுகள் முழுமையாக வந்த பிறகே, சிறுமிகளின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.