அதிர்ச்சி... தகுதியற்ற 2.21 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கம் - மத்திய அமைச்சர் தகவல்!
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களின் விபரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுத் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில், தகுதியற்ற 2.21 கோடி ரேஷன் கார்டுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற 'ஸ்மார்ட் கிடங்கு மேலாண்மை அமைப்பு' தொடக்க விழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த விவரங்களை வெளியிட்டார். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இது குறித்துப் பேசுகையில், இந்த நீக்க நடவடிக்கையை மத்திய அரசு நேரடியாக மேற்கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

மத்திய உணவு அமைச்சகம் பல்வேறு தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் சுமார் 8.51 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம் என அடையாளம் கண்டு, அந்தப் பட்டியலை அந்தந்த மாநில அரசுகளுக்குச் சரிபார்ப்புக்காக அனுப்பி வைத்தது. இதைப் பரிசீலித்த மாநில அரசுகள், தங்களின் சொந்த விதிகளின்படி கள ஆய்வு செய்து, முதற்கட்டமாக 2.21 கோடி போலி மற்றும் தகுதியற்ற கார்டுகளைப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளன.
டிஜிட்டல் முறை மற்றும் ஆதார் இணைப்பு மூலமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பின்வரும் காரணங்களுக்காக கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இறந்து போனவர்களின் பெயர்கள் தொடர்ந்து கார்டுகளில் நீடித்தது. வருமான வரி செலுத்துவோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கார்டுகளைப் பயன்படுத்தியது. சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அல்லது வெவ்வேறு கார்டுகளில் ஒரே நபரின் பெயர் இடம் பெற்றிருந்தது.

இந்தத் தூய்மைப்படுத்தும் பணியின் மூலம் தற்பொழுது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை 79 கோடியாக உள்ளது. தகுதியற்ற கார்டுகள் நீக்கப்பட்டதன் மூலம், தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு புதிதாக சுமார் 3 கோடி ரேஷன் கார்டுகளை வழங்க மாநில அரசுகளுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் நோக்கம் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல; மாறாக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்கள், தகுதியுடைய உண்மையான ஏழைகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதே ஆகும் என்றும் அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது 98.5 சதவீத விநியோகம் இ-பிஓஎஸ் கருவிகள் மூலம் பயோமெட்ரிக் முறையில் துல்லியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
