அதிர்ச்சி... கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட 2ம் ஆண்டு மாணவி தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கல்லூரி நிர்வாகத்தால் தற்காலிகமாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்ட பி.காம். இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், தனது எதிர்காலக் கனவு கலைந்துவிட்டதாகக் கருதி மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாலாட்டின்புதூர் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி, கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகள் திவ்யா (18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (பி.காம்.) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரிப் படிப்பைத் தாண்டி, திவ்யா தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) இணைந்து மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்துள்ளார். வருங்காலத்தில் எப்படியாவது படித்துக் காவல் துறை அதிகாரி (போலீஸ் வேலை) ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு அவர் கடுமையாகப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கல்லூரியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, திவ்யாவை கல்லூரி நிர்வாகம் சமீபத்தில் வகுப்புகளில் இருந்தும் என்.சி.சி. பிரிவில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் திவ்யா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
தனது கல்லூரிப் பதிவேட்டில் ஒழுங்கீன நடவடிக்கை என்று குறிக்கப்பட்டால், இனிமேல் தன்னால் எக்காரணத்தைக் கொண்டும் அரசு மற்றும் காவல் துறைப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும், தனது வாழ்நாள் கனவு முற்றிலும் கலைந்துவிட்டது என்றும் கருதி கடந்த சில நாள்களாக யாரிடமும் பேசாமல் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நநேரத்தில், வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவி திவ்யா அறையின் உத்திரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த பெற்றோர்கள் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதனர். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாலாட்டின்புதூர் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் திவ்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின்னணி என்ன, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
