அதிர்ச்சி... 3 மாத கர்ப்பிணி மனைவி கழுத்தறுத்துக் கொலை... காதல் கணவன் வெறித்தனம்!
தெலங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 3 மாத கர்ப்பிணியான இளம் பெண் ஒருவர், தனது காதல் கணவராலேயே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பிரபல யூட்யூப்பர் வைஷ்ணவி. 20 வயதாகும் வைஷ்ணவிக்கு குறுகிய காலத்திலேயே யூ-ட்யூப்பில் ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். அதன் மூலம் பிரபலமடைந்தார். இவரது காதல் கணவர் ஹரிபாபு(40). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மே 29, 2025 அன்று இருவீட்டார் சம்மதத்துடன் ஒரு கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டனர்.

வைஷ்ணவி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததுடன், உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில் வைஷ்ணவியின் காதல் கணவனே கொலை செய்தது தெரிய வந்தது.
திருமணத்தின் போது வைஷ்ணவியின் தந்தை 2 குண்டா நிலத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளார். இருப்பினும், தனது கடன்களை அடைக்க மேலும் ₹5 லட்சம் ரொக்கம் கேட்டு ஹரிபாபுவும் அவரது குடும்பத்தினரும் வைஷ்ணவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். வைஷ்ணவியின் தந்தை, "குழந்தை பிறந்ததும் பணம் தருகிறேன்" என்று கூறியும், ஹரிபாபுவின் தாய் மற்றும் சகோதரர்களின் தூண்டுதலால் இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொலைக்குப் பிறகு தனது பைக்கில் தப்பிச் சென்ற ஹரிபாபுவை, கோருட்லா புறநகர்ப் பகுதியில் வைத்துப் போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள ஹரிபாபுவின் தாய் லட்சுமி மற்றும் சகோதரர்கள் ஆனந்த், அசோக் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
