அதிர்ச்சி... மிட்டாய் திருடியதற்காக 12 வயது சிறுமி அடித்துக் கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே, ஒரு மிட்டாய் திருட்டிற்காக 12 வயது சிறுமி அவரது தந்தையே அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் அருகே வசித்து வரும் பால் வியாபாரி ஒருவருக்கு 12 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். அந்தச் சிறுமி அருகில் உள்ள மளிகைக் கடையிலிருந்து சில மிட்டாய்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் சிறுமியின் தந்தைக்குத் தெரியவந்ததும், அவர் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமியை அவர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.

கணவரின் கோரத் தாண்டவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ஆர்த்தி தேவி, மகளைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், ஆத்திரத்தில் இருந்த தந்தை, தனது மனைவியையும் கடுமையாகத் தாக்கி அப்புறப்படுத்தியுள்ளார்.
தந்தையின் தொடர் தாக்குதலில் பலத்த காயமடைந்த 12 வயது சிறுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். ஒரு சிறிய தவறுக்காகத் தனது தந்தையாலேயே அந்தச் சிறுமி கொல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளைக் கொன்ற தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
