அதிர்ச்சி.. 17 வயது மாணவி 3 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டி வந்த கால்பந்து பயிற்சியாளர் கைது!
மகாராஷ்டிரா மாநிலத்தில், கால்பந்து விளையாட்டில் பெரிய எதிர்காலம் இருப்பதாக ஆசைவார்த்தை கூறி, 17 வயது சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய 37 வயதுடைய கால்பந்து பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியில் தனியார் கால்பந்து பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தை 37 வயதுடைய நபர் ஒருவர் நடத்தி வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இந்த மையத்தில் சேர்ந்து கால்பந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். பயிற்சியின் போது அந்தச் சிறுமியிடம் நெருங்கிய அந்தப் பயிற்சியாளர், கால்பந்து விளையாட்டில் உனக்குப் "பிரகாசமான எதிர்கால வாய்ப்புகள்" இருப்பதாகக் கூறி, சிறுமியின் முழு நம்பிக்கையையும் பெற்றுள்ளார். பின்னர், அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திச் சிறுமியைத் தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பயிற்சியாளர், கடந்த 3 ஆண்டுகளாக அந்த மாணவியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், மாணவிக்குத் தெரியாமல் அதனைத் தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் எடுத்து வைத்துள்ளார்.
நாட்கள் செல்லச் செல்ல பயிற்சியாளரின் கொடூர குணம் தெரிந்ததால், அந்த மாணவி அவரிடமிருந்து மெல்ல விலகத் தொடங்கி, அவருடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயிற்சியாளர், மாணவியை மீண்டும் தனது வழிக்குக் கொண்டு வருவதற்காக, தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு விடுவேன் என்று கூறி 'பிளாக்மெயில்' செய்து தொடர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பயிற்சியாளரின் தொடர்ச்சியான அச்சுறுத்தலாலும், கடுமையான துன்புறுத்தலாலும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல், தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகள் குறித்துத் தனது குடும்பத்தினரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக மணிக்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து மணிக்பூர் காவல்துறையினர், கடந்த சனிக்கிழமை அந்த கால்பந்து பயிற்சியாளரை கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் கற்பழிப்பு, குற்றவியல் மிரட்டல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழும் கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் வேறு ஏதேனும் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
