25 வயதில் அதிர்ச்சி... பிரபல கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் திடீர் மரணம்.. கதறும் ரசிகர்கள்!

 
ஜெய்டன் ஆடம்ஸ்  கால்பந்து

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காகக் களம் கண்டு வரலாற்றுச் சாதனை படைத்த இளம் மிட்ஃபீல்டர் ஜெய்டன் ஆடம்ஸ் (25) கேப் டவுனில் உள்ள ஒரு குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது கால்பந்து உலகைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென்னாப்பிரிக்க அணி முதன்முறையாக நாக்-அவுட் சுற்றான 32 சிறந்த அணிகளின் சுற்றுக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்தது. இத்தொடரில் தென் கொரியா, மெக்சிகோ மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகளுக்கு எதிரான மூன்று குரூப் சுற்று போட்டிகளிலும் ஜெய்டன் ஆடம்ஸ் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

ஜெய்டன் ஆடம்ஸ்

உலகக் கோப்பை தொடர் முடிந்து சில வாரங்களே ஆன நிலையில், அவர் தனது சொந்த ஊரான கேப் டவுனில் உள்ள ஸ்காட்செக்லூஃப் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் சனிக்கிழமை காலை உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஜெய்டன் ஆடம்ஸின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை அவரது குடும்பத்தினராலோ அல்லது அவர் விளையாடி வந்த மாமிலோடி சண்டவுன்ஸ் கிளப் நிர்வாகத்தாலோ இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கேப் டவுன் நகரக் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, இந்த அசாதாரண மரணம் குறித்து தீவிரமான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இணையதளங்களில் அவரது மரணம் குறித்துப் பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில், தென்னாப்பிரிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் கேடன் மெக்கென்சி, "இளம் வீரரின் மரணம் குறித்துப் பொதுமக்களும் ஊடகங்களும் எவ்வித வதந்திகளையும் பரப்ப வேண்டாம்; அவரது குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெய்டன் ஆடம்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போதே, ஜூன் 17 அன்று இவரை வளர்த்து ஆளாக்கிய பாட்டி மாரியன்னா ஆடம்ஸ் திடீரென மரணமடைந்தார். அந்தப் பேரிழப்புக்கு அடுத்த நாளே செக் குடியரசுக்கு எதிரான மிக முக்கியமான உலகக் கோப்பை போட்டியில் நாட்டின் நலனைக் கருதி ஜெய்டன் ஆடம்ஸ் களம் கண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த இளம் கால்பந்து திறமைகளுள் ஒருவராகக் கருதப்பட்ட ஜெய்டன் ஆடம்ஸ், மாமிலோடி சண்டவுன்ஸ் கிளப் அணிக்காக விளையாடி உள்நாட்டுப் பிரீமியர் லீக் மற்றும் இந்த ஆண்டின் புகழ்பெற்ற ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தவர் ஆவார்.

அவரது இந்த அகால மரணத்திற்குப் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர்கள் சங்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கால்பந்து ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.