அதிர்ச்சி... விருதுநகரில் கோயில் வரி தகராறில் சிறுமி மீது கார் ஏற்றி கொலை முயற்சி!

 
சிறுமி கார் ஏற்றி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கோயில் வரி செலுத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, 15 வயது சிறுமி மீது காரை ஏற்றி கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரிக்குடி அடுத்த வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குண்டுமலையின் மகன் ஆனந்தராஜ் தரப்பினருக்கும் இடையே உள்ளூர் கோயில் வரி செலுத்துவது தொடர்பாக நீண்ட நாட்களாகவே தகராறு இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று இந்த வரி விவகாரம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், தான் வைத்திருந்த திமுக கொடி கட்டிய காரை, அங்கு நின்றுகொண்டிருந்த கருணாநிதியின் 15 வயது மகள் மீது மிகக் கொடூரமாக ஏற்றியுள்ளார்.

கார் ஏறியதில் அந்தச் சிறுமி படுகாயமடைந்த நிலையில், இந்தக் கொலை முயற்சி சம்பவத்தின் நேரடி வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பார்ப்போரை உறைய வைத்துள்ளது.

தன் மகள் மீது காரை ஏற்றியதைக் கண்டு துடிதுடித்துப் போய் தட்டிக்கேட்கச் சென்ற தந்தை கருணாநிதியையும் ஆனந்தராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்ட கும்பல் கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளது. அத்துடன், அவர்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், நரிக்குடி காவல் துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஆனந்தராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்கப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.