அதிர்ச்சி... பிக்பாஸ் பிரபலம் நடிகை ரேணு சுதி கவலைக்கிடம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

 
மலையாள பிக்பாஸ்  ரேணு சுதி மலையாள பிக்பாஸ்  ரேணு சுதி

மலையாளத் திரைத்துறையின் வளர்ந்து வரும் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரேணு சுதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள செய்தி மலையாள திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த பிரபல நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதியின் மனைவியான ரேணு சுதிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலப் பாதிப்புகள் இருந்துள்ளன. இந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட தற்போதைய மருத்துவப் பரிசோதனைகளின் புதிய அறிக்கையில், அவரது உடலில் நோய்த் தொற்று மிகத் தீவிரமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து விரைவில் உயர்தரச் சிகிச்சைகள் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அந்த நோய் என்ன என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கடந்த 2023-ஆம் ஆண்டு நேரிட்ட பயங்கரச் சாலை விபத்தில் ரேணு சுதியின் கணவர் கொல்லம் சுதி மரணமடைந்தது ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கியது. கணவரின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க, ரேணு சுதி கலைத்துறையில் தடம் பதித்தார். மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களம் இறங்கிய அவர், அதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.

அதே நேரத்தில், கணவரின் மரணத்திற்குப் பிறகான அவரது சில தனிப்பட்ட முடிவுகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் காரணமாகப் பல்வேறு நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் அவர் ஆளாகியிருந்தார். இத்தகைய சூழலில், வாழ்க்கையில் அடுத்தடுத்துப் போராடி வரும் இளம் நடிகையான ரேணு சுதி, தற்போது உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களைக் கலங்க வைத்துள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் எனப் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.