அதிர்ச்சி... சொத்துக்காக தம்பியைக் கோடாரியால் வெட்டிக்கொன்ற அண்ணன்!
தெலங்கானா மாநிலத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலத் தகராறு காரணமாக, சொந்தத் தம்பியை அண்ணனே கோடாரியால் வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மன்செரியல் மாவட்டம் சந்திரவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்து. இவரது தம்பி சந்தனவேனி ராஜேஷ் (28). அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தங்களது பூர்வீக நிலத்தைப் பிரித்துக் கொள்வதில் கடந்த சில வருடங்களாகவே கடுமையான தகராறு நீடித்து வந்தது. இது தொடர்பாகப் பலமுறை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டி சமரசம் பேசப்பட்டுள்ளது. எனினும், இருவருக்குள்ளும் இருந்த நிலப் பகை மற்றும் ஆத்திரம் தீராமலேயே இருந்துள்ளது.
இந்நிலையில், இன்று இருவருக்கும் இடையே மீண்டும் நிலம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டு, அது வாக்குவாதமாக முற்றியுள்ளது. வாக்குவாதம் எல்லை மீறிய ஆத்திரத்தில், அண்ணன் சந்து வீட்டில் இருந்த கூர்மையான கோடாரியை எடுத்து வந்து, தனது தம்பி சந்தனவேனி ராஜேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த ராஜேஷ், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தம்பியைக் கொலை செய்த பிறகு அண்ணன் சந்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தனவேனி ராஜேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அண்ணன் சந்துவை கைது செய்யத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்திற்குள் ஏற்பட்ட சொத்து தகராறில் தம்பியை அண்ணனே கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
