அதிர்ச்சி... அரசுப் பள்ளிக்கு கள்ளச்சாராயம் கொண்டு வந்த 10-ம் வகுப்பு மாணவர் கைது; வீட்டில் 28 லிட்டர் பறிமுதல்!

 
பாட்டில் கள்ளச்சாராயம்

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அரசுப் பள்ளிக்குத் தண்ணீர் பாட்டிலில் கள்ளச்சாராயம் கொண்டு வந்து விற்பனை செய்ய முயன்ற 10-ம் வகுப்பு மாணவனைப் போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மேலும், அம்மாணவனிடம் சாராயத்தைக் கொடுத்து அனுப்பிய நபரின் வீட்டிலிருந்து 28 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் பயிலும் சில மாணவர்கள் மூலமாக வகுப்பறைகளில் கள்ளச்சாராய விற்பனை தடையின்றி நடைபெற்று வருவதாகப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஆசிரியர்கள் குழுவினர் நேற்று அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்களின் பைகளை திடீரென சோதனை செய்தனர். அப்போது, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து பார்த்த போது, அதில் கள்ளச்சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இது குறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக தாமரசேரி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தது. போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த மாணவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின: பிடிபட்ட மாணவனின் நெருங்கிய நண்பன் ஒருவனின் வளர்ப்புத் தந்தைதான், கள்ளச்சாராயத்தைத் தண்ணீர் பாட்டிலில் அடைத்துப் பள்ளியில் உள்ள சிலருக்கு விற்பனை செய்துவிட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்தது விசாரணையில் அம்பலமானது.

மாணவன் கொடுத்த தகவலின் பேரில், தாமரசேரி போலீசார் குறிப்பிட்ட அந்த நபரின் வீட்டிற்குச் சென்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 லிட்டர் கள்ளச்சாராயத்தை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, போலீசார் தனது வீட்டிற்கு வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். போலீசார் அவர் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பள்ளிக்குக் கள்ளச்சாராயம் கொண்டு வந்த 10-ம் வகுப்பு மாணவனைப் போலீசார் முறைப்படி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி, அம்மாணவன் கோழிக்கோட்டில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு (Juvenile Home) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அரசுப் பள்ளி வகுப்பறையில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.