அதிர்ச்சி... கல்லூரி அறையில் கட்டுக்கட்டாக பணம் - கறையான் அரித்ததால் அம்பலம்!

 
கரையான் பணம் கரையான் பணம்

கொல்கத்தாவில் உள்ள முன்னணி மற்றும் புகழ்பெற்ற கல்லூரியின் மாணவர் யூனியன் அறைக்குள் இருந்து, சூட்கேஸ்களில் கறையான் அரித்த நிலையில் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கட்டுக்கட்டாக மீட்கப்பட்டுள்ளது கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தாவில் உள்ள அந்தக் கல்லூரியின் மாணவர் சங்க அறை நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அந்த அறையை முழுமையாகத் தூய்மைப்படுத்தும் பணிகளில் கல்லூரி ஊழியர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அறையின் ஒரு மூலையில் இருந்த பழைய சூட்கேஸ்களை ஊழியர்கள் எடுத்துத் திறந்து பார்த்தபோது, அவற்றுள் கட்டுக்கட்டாகப் ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அடுக்கப்பட்டிருந்த அந்தப் பணத்தின் பெரும்பகுதி நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், கறையான்களால் அரிக்கப்பட்டுச் சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இது குறித்து ஊழியர்கள் உடனடியாகக் கல்லூரி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொல்கத்தா காவல்துறையினர், கறையான் அரித்த நிலையில் இருந்த அந்த ரொக்கப் பணத்தைக் கைப்பற்றிப் பறிமுதல் செய்துள்ளனர்.

கல்லூரி மாணவர் சங்க அறைக்குள் இவ்வளவு பெரிய தொகை யாருக்கும் தெரியாமல் சூட்கேஸ்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது பல்வேறு பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. "இந்தத் தொகை கடந்த காலங்களில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலின் போது  ஓட்டுகளுக்காகப் பயன்படுத்துவதற்காகப் பதுக்கப்பட்டதா? அல்லது கல்லூரியின் கல்விக்கட்டண வசூலில் முறைகேடுகள் செய்து ரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட கருப்புப் பணமா?" என்ற இருவேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.