அதிர்ச்சி... ஆன்லைன் மோசடியில் போலீஸ்காரர் தலைமையில் இயங்கிய சைபர் கும்பல்!
சென்னை சைபர் கிரைம் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், பல கோடி ரூபாய் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட போலீஸ்காரர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், முக்கியக் குற்றவாளிகளைச் சென்னையில் வைத்து கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியைச் சேர்ந்த பிரதீப். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தார். பிரதீப்புடன் சேர்ந்து போலி வங்கி கணக்குகளை நிர்வகித்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி செய்த பணத்தை நேரடியாகத் தங்கள் கணக்கிற்கு மாற்றாமல், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பல்வேறு பெயர்களில் வங்கி கணக்குகளை இவர்கள் தொடங்கியுள்ளனர். ஆன்லைன் மோசடி மூலம் வரும் பணத்தை இந்த போலி கணக்குகளுக்கு மாற்றச் செய்து, பின்னர் அதனைப் பல்வேறு நிலைகளில் பிரித்து எடுத்துள்ளனர்.

காவல்துறையின் உதவி: ஒரு போலீஸ்காரரே இந்த கும்பலில் இருந்ததால், போலீஸ் விசாரணை மற்றும் கண்காணிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து அவர் கூட்டாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது பின்னணியில் சர்வதேச அளவிலான சைபர் கும்பல் ஏதேனும் உள்ளதா? மற்றும் இதுவரை எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர் என்பது குறித்த விவரங்களைச் சென்னை சைபர் கிரைம் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
