அதிர்ச்சி... ரயில் நிலைய குடிநீரில் இ-கோலி பாக்டீரியா - CAG அதிர்ச்சி தகவல்!
இந்திய ரயில்வேயின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் ஆபத்தான 'இ-கோலி' பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தனது அறிக்கையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 8 முக்கிய ரயில் நிலையங்களின் 'வாட்டர் கூலர்' குடிநீரில் மனித உடலுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் இ-கோலி பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. கோவை, பாலக்காடு ஜங்ஷன், ஹைதராபாத், மும்பை CSMT, பிவாண்டி ரோடு, கல்யாண், லோனாவலா, மதுபூர் உட்பட 105 ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பார்ம் குடிநீர் குழாய் மாதிரிகளை ஆய்வு செய்ததில் இ-கோலி மற்றும் 'Total Coliform' பாக்டீரியாக்கள் பரவலாகக் கலந்துள்ளது உறுதியாகியுள்ளது.
59 ரயில் நிலையங்களில் குடிநீருக்கான அடிப்படை பாக்டீரியா பரிசோதனைகளே முறையாகச் செய்யப்படவில்லை என்பதும், பல இடங்களில் தண்ணீரைச் சுத்திகரிக்க வேண்டிய குளோரின் அளவு சரியான விகிதத்தில் இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இ கோலி பாக்டீரியா கலந்த நீரைக் குடிப்பதன் மூலம் பயணிகளுக்குத் தீவிர வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்றுவலி, தொடர் வாந்தி, காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என CAG எச்சரித்துள்ளது.
ரயில் நிலையங்களில் திறந்தவெளி மற்றும் சுத்திகரிக்கப்படாத குடிநீரைப் பயன்படுத்தும்போது பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
