பெற்ற மகனை தந்தையே அடித்துக் கொன்ற அதிர்ச்சி!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் பகுதியில், போதைப்பழக்கத்திற்கு அடிமையாகித் திருந்தாத தனது மகனைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் குணால், கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கஞ்சா மற்றும் மதுப் பழக்கங்களுக்கு அடிமையாகித் தனது நண்பர்களுடன் ஊதாரித்தனமாகச் சுற்றி வந்துள்ளார். மகனின் இந்தத் தவறான நடவடிக்கைகளைக் தந்தை வெங்கடேசன் தொடர்ந்து கண்டித்தும், அவர் தன் போக்க மாற்றிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குணாலைப் பார்த்து ஆத்திரமடைந்த தந்தை வெங்கடேசன், கட்டையால் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் குணாலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அவரை மீட்டுச் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குணால் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குணாலின் தாய் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தன் மகனைக் கொன்ற தந்தை வெங்கடேசனைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
