ஆய்வில் அதிர்ச்சி... ரூ.624 கோடி வருவாய் ஈட்டியும் சென்னை மெட்ரோவிற்கு ரூ.1,003 கோடி நிதி இழப்பு!
கடந்த நிதியாண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கணிசமான வருவாயைப் பதிவு செய்திருந்தபோதிலும், அதன் செலவினங்கள் மற்றும் கடன் காரணமாக ரூ.1,003 கோடி வரையில் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக நிதி மற்றும் முதலீட்டு ஆய்வுத் தளமான 'குரோ' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மெட்ரோ ரயில் போக்குவரத்துப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோவின் நிதி நிலைமை குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த நிதியாண்டில் பயணச்சீட்டு விற்பனை மற்றும் பயணச்சீட்டு சாரா விளம்பரங்கள் மூலம் ரூ.624 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஆனால், அதே நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ.1,003 கோடியை எட்டியுள்ளது. நிறுவனத்தின் ஈட்டப்பட்ட மொத்த வருவாயை விட, அதன் நிதி இழப்பானது 160.8 சதவீதம் அதிகமாக உள்ளது நிதி வல்லுநர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் வருவாய் கணிசமாக உயர்ந்த போதிலும் இந்த அளவிலான நிதி இழப்பு ஏற்பட்டதற்குக் கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது:
மெட்ரோ கட்டமைப்பு விரிவாக்கத்திற்காகப் பெறப்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகையைத் திரும்பச் செலுத்துதல். ரயில் பெட்டிகள் பராமரிப்பு, மின்சாரக் கட்டணம், தொழில்நுட்பப் பராமரிப்பு மற்றும் ஊழியர்களுக்கான தினசரி இயக்கச் செலவுகள் அதிகரித்தது.

இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் நிறுவனங்களும் இதேபோன்ற நிதிச் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன: இதே காலக்கட்டத்தில் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ரூ.625 கோடி நிதி இழப்பைச் சந்தித்துள்ளது. ஹைதராபாத் மெட்ரோ நிறுவனம் ரூ.626 கோடி இழப்பைப் பதிவு செய்துள்ளது.
தென்னகத்தின் முக்கிய நகர மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதிலும், ஆரம்பக்கட்ட உள்கட்டமைப்புச் செலவுகள் மற்றும் கடன் சுமைகள் காரணமாகவே இந்த நிதிப் பின்னடைவுகள் தொடர்வதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
