ஆய்வில் அதிர்ச்சி... தமிழகத்தில் 43.3% குழந்தைகளுக்கு ரத்த சோகை பாதிப்பு.. பெண்களில் 52.8% பேருக்கு பாதிப்பு!
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 43.3 சதவீதம் குழந்தைகள் மற்றும் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 52.8 சதவீதம் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இணைந்து நடத்திய 'சம்பதா' நுண் ஊட்டச்சத்து ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இணைந்து மேற்கொண்ட 'சம்பதா' என்ற நுண் ஊட்டச்சத்து ஆய்விற்காக, நாடு முழுவதும் 35 மாநிலங்களில் உள்ள 183 மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

தமிழகத்தில் 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளிடையே 43.3 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு பதிவாகியுள்ளது. இது தேசிய சராசரியை விட 2 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 52.8 சதவீதம் பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் பெண்களுக்கான ரத்த சோகை பாதிப்பு 55.9 சதவீதமாக உள்ளது.

பள்ளிச் சிறார்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பொறுத்தவரை, தேசிய சராசரியை விடத் தமிழகம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 5 முதல் 9 வயது வரையிலான சிறார்களில் 22.2 சதவீதம் பேருக்கு மட்டுமே ரத்த சோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது; மேலும், வளரிளம் பருவத்தினர் இடையே ரத்த சோகை வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளிடம் ஏற்படும் ரத்த சோகை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, முறையான ஊட்டச்சத்து சிகிச்சையை எடுத்துக் கொண்டால் பாதிப்பு முழுமையாகச் சீராகும் என அவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
