அதிர்ச்சி... இந்தியாவில் முதன்முறையாகக் 'கிளி போர்னா வைரஸ் 4' - விஞ்ஞானிகள் எச்சரிக்கை: 44 பறவைகளுக்குத் தொற்று உறுதி!

 
கிளி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் விஞ்ஞானிகள், உள்நாட்டில் முதன்முறையாகப் பறவைகளைத் தாக்கும் அதிபயங்கர 'கிளி போர்னா வைரஸ் 4' என்ற புதிய வகை வைரஸ் தொற்றைக் கண்டறிந்துள்ளனர். கூண்டுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் கிளிகளை இந்த வைரஸ் தீவிரமாகத் தாக்குவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த 'கிளி போர்னா வைரஸ் 4' தொற்றால் பாதிக்கப்படும் பறவைகளுக்கு 'பிடிடி' எனப்படும் மிகவும் ஆபத்தான நோய் ஏற்படுகிறது. இந்த நோய் பறவைகளிடம் பின்வரும் பாதிப்புகளை உருவாக்குகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் சென்றதும் பறவைகளின் செரிமான மண்டலம் மற்றும் நரம்பு மண்டலங்களை மிகக் கொடூரமான முறையில் வதக்கிப் பாதிக்கிறது.

கிளி

நரம்புகள் பாதிக்கப்படுவதால் உணவைச் செரிக்க முடியாமல், இறுதியில் பறவைகள் மிகக் குறுகிய காலத்திலேயே கொத்துக் கொத்தாக உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் பரவல் எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் கண்டறிய அசாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் கூண்டுகளில் வளர்க்கப்படும் 83 பறவைகளிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தீவிர ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில், பரிசோதிக்கப்பட்ட 83 பறவைகளில் 44 பறவைகளுக்கு இந்த 'கிளி போர்னா வைரஸ் 4' தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பாதிக்கும் மேற்பட்ட பறவைகள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிளிகள் மற்றும் கூண்டுகளில் அடைத்து வளர்க்கப்படும் பறவைகளின் ஆரோக்கியத்தை மக்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கால்நடை மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.