அதிர்ச்சி... முந்திரி சாப்பிட்டபோது மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு!
சென்னையில் முந்திரி சாப்பிட்ட இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் இரண்டரை வயது மகள் ஹரிவர்த்தினி.ஹரிவர்த்தினி நேற்று இரவு தனது சகோதரியுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டில் முந்திரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முந்திரி பருப்பு சிறுமியின் மூச்சுக்குழாயில் சிக்கியதாகத் தெரிகிறது. இதனால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். பதற்றமடைந்த பெற்றோர், உடனடியாக அவரை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். முந்திரி சாப்பிடும்போது ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்திற்குத் தற்காலிகக் காரணமாகக் கூறப்படுகிறது.
சிறிய வயதுக் குழந்தைகளுக்கு நட்ஸ், திராட்சை போன்ற உணவுகளைக் கொடுக்கும் போது அவை தொண்டையில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகள் அமர்ந்து நிதானமாகச் சாப்பிடுவதை உறுதி செய்வதும், சாப்பிடும்போது ஓடிப் பிடித்து விளையாடுவதைத் தவிர்ப்பதும் அவசியம். இந்தச் சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
