அதிர்ச்சி... சென்னையில் பெட்டி பெட்டியாக தங்கம்... ஆவணங்களின்றி ரூ.77 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

 
விருதுநகர் நகைகள் சோதனை தேர்தல் பறக்கும்படை விருதுநகர் நகைகள் சோதனை தேர்தல் பறக்கும்படை

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் சுமார் ரூ.77 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னையில் உரிய ஆவணங்களின்றி மினி வேனில் கடத்தி வரப்பட்ட 381 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அசோக் நகர் 11-ஆவது நிழற்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தனர்.

தங்கம்

அந்த வாகனத்தில் பெட்டி பெட்டியாகத் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. அவற்றின் மொத்த எடை சுமார் 381 கிலோ என்றும், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.77 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய வங்கி ஆவணங்களோ அல்லது ரசீதுகளோ அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் இல்லை எனத் தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் உடனடியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த நகைகள் எந்த நகைக்கடைக்குச் சொந்தமானவை? இவை தேர்தலுக்காகக் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் கடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைகள் பறிமுதல் சோதனை தேர்தல்

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் நகைகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையிலான நகைகள் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்திலும், வர்த்தக வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.