ஆய்வில் அதிர்ச்சி... குடிநீரில் கழிவுநீர் பாக்டீரியாக்கள் - அலறியடித்து ஓடிய அதிகாரிகள்!
டெல்லியில் பிரபல ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆய்வில், டெல்லி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் பாக்டீரியாக்கள் கலந்திருப்பது அம்பலமானதைத் தொடர்ந்து, டெல்லி அரசு தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் மனிதக் கழிவுகளில் காணப்படும் ஆபத்தான பாக்டீரியாக்கள் கலந்திருப்பதாக வெளியான ஆய்வறிக்கை, ஒட்டுமொத்த நகரத்தையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் டெல்லி முழுவதும் 18 இடங்களில் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தியது. சேகரிக்கப்பட்ட 18 மாதிரிகளில் 8 மாதிரிகள் (சுமார் 44%) குடிப்பதற்குத் தகுதியற்றவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மாதிரிகளில் 'ஈ-கோலை' மற்றும் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது காலரா, டைபாய்டு மற்றும் கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி ராஜௌரி கார்டன் பகுதியில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில் அதிகபட்சமாக 920 CFU அளவில் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, டெல்லி குடிநீர் வாரிய அமைச்சர் பர்வேஷ் வர்மா அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை காலை முதல் மீண்டும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

டெல்லியில் உள்ள 15,400 கி.மீ நீளமுள்ள குழாய்களில் சுமார் 5,200 கி.மீ குழாய்கள் 30 ஆண்டுகளுக்கு மேலானவை. இவற்றை மாற்ற ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டம் விரைவுபடுத்தப்படும். குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, 100 கி.மீ நீளமுள்ள முக்கியக் கழிவுநீர் கால்வாய்கள் பருவமழைக்கு முன்னரே தூர்வாரப்படும்.
