ஆய்வில் அதிர்ச்சி... தமிழகத்தில் அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பங்கள்!
தமிழகத்தில் 19 வயதிற்குட்பட்ட பதின்ம வயது சிறுமிகள் கர்ப்பமடையும் எண்ணிக்கை 15,000-க்கும் மேல் உயர்ந்துள்ளதாகப் பொது சுகாதாரத்துறை நடத்திய சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் இன்னும் தொடரும் குழந்தை திருமணங்கள் மற்றும் முறையான பாலியல் கல்வி விழிப்புணர்வின்மையே இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு மற்றும் போதிய வழிகாட்டுதல் இல்லாமை போன்றவற்றால் பதின்ம வயதினர் இத்தகைய சூழலுக்குத் தள்ளப்படுவதாகச் சமூக நலத்துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
19 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு முழுமையான உடல் வளர்ச்சி மற்றும் மன முதிர்ச்சி ஏற்பட்டிருக்காது என்பதால், இந்த வயதில் கர்ப்பமடைவது தாய் மற்றும் பிறக்கும் குழந்தை ஆகிய இருவருக்குமே கடுமையான மருத்துவச் சிக்கல்களைக் கொண்டு வரும். குறிப்பாக இரத்த சோகை ஏற்படுதல், குறைப்பிரசவம் ஆதல், பிறப்புக் குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல் போன்ற பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதுடன், தாய்சேய் இறப்பு விகிதம் அதிகரிக்கும் அபாயமும் இதில் மிக அதிகமாக உள்ளது.
இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு முறையான விழிப்புணர்வு முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் மருத்துவக் கவுன்சிலிங் வழங்குவதோடு, குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வையும், பெற்றோர்களுக்கான சிறப்பு ஆலோசனைகளையும் தீவிரப்படுத்தச் சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
