அதிர்ச்சி... இந்தியன் ரயில்வேயில் 'ஆட்குறைப்பு' - 29,608 பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவு!

 
ரயில் தண்டவாளம் பராமரிப்பு கட்டுமானம் ரயில் தண்டவாளம் பராமரிப்பு கட்டுமானம்

இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் இந்திய ரயில்வேயில், நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மிகப் பாரிய அளவில் பணியாளர்களைக் குறைக்க ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது ரயில்வேயில் பணியாற்றும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையான 14,80,455-ல், சுமார் 2 சதவீதம் அதாவது 29,608 பணியிடங்களை உடனடியாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முடிவின்படி, காலியாக உள்ள இடங்களை நிரப்பாமல் விடுவது அல்லது தேவையற்றது எனக் கருதப்படும் பணியிடங்களை முழுமையாக ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது ரயில்வே ஊழியர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாளம் பராமரிப்பு

குறிப்பாக தமிழகத்தைச் சார்ந்த தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியிடங்கள் ஏப்ரல் 1, 2026 நிலவரப்படி குறைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கூடுதல் வழித்தடங்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் சூழலில், பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பெரும் கவலையை அளிப்பதாக ரயில்வே ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஏற்கனவே பல துறைகளில் போதிய பணியாளர்கள் இன்றி தற்போதைய ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையுடன் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ரயில் பாதுகாப்பில் சமரசத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரயில் தண்டவாளம் ரயில்வே பராமரிப்பு

ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ரயில்வே தொழில்நுட்ப ரீதியாக முன்னேறினாலும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கு மனித ஆற்றல் மிகவும் அவசியம். குறிப்பாகத் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் சிக்னல் பிரிவுகளில் பணியாளர்களைக் குறைப்பது விபத்துகளுக்கு வழிவகுக்கும்" என்று எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், செலவினங்களைக் குறைக்கவும், தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், 30,000-க்கு நெருக்கமான பணியிடங்கள் ரத்து செய்யப்படுவது, எதிர்காலத்தில் ரயில்வே பணிக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப் போடுவது போல அமைந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.