அதிர்ச்சி... மதுரை டூ சென்னை ரூ. 32,000 - விண்ணைத் தொட்ட விமானக் கட்டணம்!

 
விமானம் விமானம்

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக மக்கள் மீண்டும் சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கான விமானக் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன.

வழக்கமாக ரூ. 4,000 முதல் ரூ. 6,000 வரை இருக்கும் உள்நாட்டு விமானக் கட்டணங்கள், தற்போது தேவை அதிகரிப்பு காரணமாகப் பல மடங்கு எகிறியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வருவதற்குப் பேருந்து மற்றும் ரயில் முன்பதிவுகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், விமானத்தையே மக்கள் கடைசி வாய்ப்பாக நாடுகின்றனர்.

விமானம் விமான நிலையம்

முக்கிய வழித்தடங்களில் மதுரை - சென்னை பழைய கட்டணம் ரூ.5,099 இருந்த நிலையில் தற்போது ரூ. 32,508 வரை உயர்ந்துள்ளது. அதே போன்று தூத்துக்குடி - சென்னை பழைய கட்டணம் ரூ.5,354 இருந்த நிலையில் தற்போது ரூ. 17,089 வரை உயர்ந்துள்ளது.

திருச்சி - சென்னை ரூ. 4,551 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 14,310 எனவும், கோவை - சென்னை பழைய கட்டணம் ரூ.4,634 இருந்த நிலையில் இந்த விடுமுறைக்கு பின்பான இன்று ரூ.11,149 என உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்காகச் சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கான மக்கள், வார இறுதி விடுமுறைக்குப் பிறகு இன்று (திங்கள்) பணிகளுக்குத் திரும்புகின்றனர்.

விமானம்

ரயில்களில் 'வெயிட்டிங் லிஸ்ட்'  அதிகமாக இருப்பதாலும், ஆம்னி பேருந்துகளிலும் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாலும் மக்கள் விமானங்களைத் தேர்வு செய்கின்றனர்.

விமான நிறுவனங்களின் 'டைனமிக்' விலை: தேவை அதிகமாக இருக்கும்போது தானாகவே கட்டணம் உயரும் 'டைனமிக் பிரைசிங்' முறையால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்ல ரூ. 32,000-க்கும் மேல் வசூலிக்கப்படுவது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.