அதிர்ச்சி... திருமணமானதை மறைத்து கல்லூரி மாணவியைக் கர்ப்பமாக்கிய வாலிபர்!

 
கர்ப்பம் கர்ப்பம்

வேலூர் மாவட்டத்தில் திருமணமானதை மறைத்து, கல்லூரி மாணவியை ஏமாற்றிக் கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஓட்டேரிபாளையத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சந்தோஷ். மின் பணியாளராக வேலை பார்த்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

உல்லாசம்

சந்தோஷ் அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். மாணவியும் அவரை முழுமையாக நம்பியுள்ளார். இதனிடையே, கடந்த 2024-ம் ஆண்டு சந்தோஷிற்கு அவரது பெற்றோர் முன்னிலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால், இந்தத் தகவலை மறைத்து அவர் தொடர்ந்து அந்த மாணவியுடன் பழகி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷிற்குத் திருமணமான விஷயம் மாணவிக்குத் தெரியவரவே, அவர் அவருடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.

கர்ப்பம்

இந்நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி மாணவிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, பெற்றோர் அவரை வேலூர் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில்: போலீசார் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள சந்தோஷைத் தேடி போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.